அவரவர்களுடைய
முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்ட வந்த தெய்வம் குல தெய்வம் எனப்படும். அவரவர் தனிப்பட்ட
முறையில் விரும்பி வழிபடும் தெய்வம் இஷ்ட தெய்வம்
எனப்படும். ஒரு சிலர் தங்களுடைய பிறப்பு ஜாதகத்தை காண்பித்து தன்னுடைய குல தெய்வம்
எது எனக் கேட்கிறார்கள். உண்மையில் பிறப்பு ஜாதகத்தைக்கொண்டு குல தெய்வத்தை கண்டுபிடிக்க
முடியாது. ஏனென்றால் குல தெய்வம் என்பது ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் பொதுவானது.
குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் ஜாதகத்தையும் ஆராய்ந்தால் ஒவ்வொரு ஜாதகமும் ஒவ்வொரு
தெய்வத்தைக்காட்டும். எனவே அது சரியாக இருக்காது. ஆனால் குடும்பத்தினர் அனைவருக்குமாக
ஒரு பொது பிரஸ்ன ஜாதகம் கணித்து அதன் மூலம் குலதெய்வத்தைக்கண்டுபிடிக்கலாம். பிரஸ்ன
ஜாதகத்தில் ஐந்தாமிடம் குல தெய்வத்தைக்குறிக்கும். ஐந்தாமிடம், ஐந்திற்குடையவன், ஐந்தில்
நின்ற கிரகம் இவைகளைக்கொண்டு குல தெய்வத்தை நிர்ணயம் செய்யலாம். இதைத்தான் கேரள ஜோதிடர்கள்
அஸ்டமங்கள பிரஸ்னத்தின் மூலம் கண்டுபிடிக்கிறார்கள்.
இஷ்ட தெய்வம் என்பது அவரவர் விருப்பபடி அமைவது. எனவே இஷ்ட தெய்வத்தை
பிறப்பு ஜாதகம் மூலம் கண்டு பிடிக்கலாம். பிறப்பு ஜாதகத்தில் ஒன்பதாமிடம் இஷ்ட தெய்வத்தைக்குறிக்கும்.
ஒன்பதாமிடம்,ஒன்பதிற்குடையவன்,ஒன்பதில் நின்ற கிரகம் இவைகளைக்கொண்டு இஷ்ட தெய்வத்தை
நிர்ணயம் செய்யலாம்.
ஒருவர் தன்னுடைய குல தெய்வ வழிபாடு,இஷ்ட தெய்வ வழிபாடு இவைகளை
தொடர்கிறாரா? இல்லையா? என்பதை நாடி ஜோதிட முறையில் எளிதில் கண்டறியலாம். தெய்வத்தை
ஒளி வடிவமாக தரிசித்ததாக பலர் தங்கள் அனுபவம் மூலமாக குறிப்பிட்டுள்ளனர். ஜோதிடத்தில்
சூரியனும்,சந்திரனும் ஒளிக் கிரகங்களாகும். சூரியன் ஸ்திர கிரகமாகும். சந்திரன் சர
கிரகமாகும். ஸ்திரம் என்றால் மாறாதது,சரம் என்றால் மாறக்கூடியது என்று பொருள். குல
தெய்வத்தை நாம் மாற்ற முடியாது, இஷ்ட தெய்வத்தை
நாம் மாற்றிக்கொள்ளலாம். எனவே சூரியன் குல தெய்வத்தையும்,சந்திரன் இஷ்ட தெய்வத்தையும்
குறிக்கும் கிரகங்களாகும்.
நாடி ஜோதிட முறையில் ஜாதகனைக்குறிக்கும் கிரகம் குருவாகும்.
குல தெய்வத்தைக்குறிக்கும் கிரகம் சூரியனாகும். இஷ்ட தெய்வத்தைக்குறிக்கும் கிரகம்
சந்திரனாகும்.
பிறப்பு ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது
3-7-11அல்லது 2-12ல் சூரியன் நின்றால் ஜாதகர் தன் குல தெய்வ வழிபாட்டை தொடர்வார்.
பிறப்பு ஜாதகத்தில்
குரு நின்ற ராசிக்கு 4-6-8-10ல் சூரியன் நின்றால் ஜாதகர் தன் குல தெய்வ வழிபாட்டை மறந்து
விட்டார்.
பிறப்பு ஜாதகத்தில்
குரு நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11அல்லது 2-12ல் சந்திரன் நின்றால் ஜாதகர் தன்
இஷ்ட தெய்வ வழிபாட்டை செய்வார்.
பிறப்பு ஜாதகத்தில்
குரு நின்ற ராசிக்கு 4-6-8-10ல் சூரியன் நின்றால் ஜாதகர் தன் இஷ்ட தெய்வ வழிபாட்டை
செய்ய மாட்டார்.
பிறப்பு ஜாதகத்தில்
சூரியன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் கேது நின்றால் ஜாதகரின் குல தெய்வ வழிபாடு
தடை பட்டுள்ளது.
பிறப்பு ஜாதகத்தில்
சந்திரன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் கேது நின்றால் ஜாதகரின் இஷ்ட தெய்வ வழிபாடு
தடை பட்டுள்ளது.
பிறப்பு ஜாதகத்தில்
சூரியன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் ராகு நின்றால் ஜாதகரின் குல தெய்வ ஆலயம் பாழடைந்து
விட்டது. அல்லது முறையாக அங்கு பூஜைகள் நடக்காது.
பிறப்பு ஜாதகத்தில்
சந்திரன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் ராகு நின்றால் ஜாதகரின் இஷ்ட தெய்வ ஆலயம்
பாழடைந்து விட்டது அல்லது முறையாக அங்கு பூஜைகள் நடக்காது.
பிறப்பு ஜாதகத்தில்
சூரியன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11அல்லது 2-12ல் சனி நின்றால் ஜாதகர் தன்
குல தெய்வத்தை வெறுப்பார்.
பிறப்பு ஜாதகத்தில்
சந்திரன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11அல்லது 2-12ல் சனி நின்றால் ஜாதகர் தன்
இஷ்ட தெய்வத்தை வெறுப்பார்.
ஆலயங்களில்
அர்ச்சனை செய்யும்போது தங்கள் கோத்திரத்தை மறந்தவர்கள் சிவ கோத்திரம் என்றோ,விஷ்ணுகோத்திரம்
என்றோ அல்லது அக்னி கோத்திரம் என்றோ கூறி வழிபாடு செய்வதுண்டு. அதுபோல் குல தெய்வத்தை
மறந்தவர்கள் சிவனையோ அல்லது விஷ்ணுவையோ குல தெய்வமாக பாவித்து வழிபடலாம். சிவத்திலிருந்தே
அனைத்தும் தோன்றியதாக நம்புபவர்கள் சிவனை குல தெய்வமாக பாவிக்கலாம். விஷ்ணுவிலிருந்தே
அனைத்தும் தோன்றியதாக நம்புபவர்கள் விஷ்ணுவை குல தெய்வமாக பாவிக்கலாம். பித்ரு வழிபாடும்,
குல தெவ வழிபாடும் கிட்டத்தட்ட ஒன்றுதான். எனவே பித்ரு வழிபாடு செய்தாலும் போதும்.
- சித்தயோகி சிவதாசன் ரவி
No comments:
Post a Comment