Sunday, December 25, 2016

புனர்பூச நட்சத்திர பரிகாரங்கள்


குருவின் நட்சத்திரமான புனர் பூச நட்சத்திரத்தின் அதிதேவதை எல்லா தேவர்களுக்கும் தாயாக விளங்கும் அதிதி ஆவார்.இதன் வடிவம் ஓடம் மற்றும் வில் ஆகும்.இதன் விருட்சம் மூங்கில் மரம்,எனவே புனர் பூசத்தில் பிறந்தவர்கள் அதிதியை வணங்குதல்,மூங்கில் மரம் நடுதல்,மூங்கில் அரிசியை கோவில்களில் தானமளித்தல் ஸ்ரீராமபிரானை வழிபடுதல் வில் மற்றும் படகுச் சின்னங்களைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களின் மூலம் எல்லாம் மிகவும் வாழ்வில் நல்ல மாற்றங்களை அடையலாம். நெல்லை மாவட்டத்தில் இருக்கும் நெல்லையப்பர் கோவில் ஸ்தல விருட்சமாக மூங்கில் மரம் இருப்பதால் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது மிகச்சிறந்த பரிகாரஸ்தலம் ஆகும்.

புனர்பூச நட்சத்திரத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்ற ஐந்தாமிடம் துலாம் இராசியாக வருவதாலும் அங்கு திருமாலுக்குரிய ஸ்வாதி நட்சத்திரம் மற்றும் முருகப் பெருமானுக்குரிய விசாக நட்சத்திரம் இடம் பெறுவதாலும் புனர் பூசத்தில் பிறந்தவர்கள் தங்கள் இறைவழிபாடு மற்றும் பரிகாரங்களை பெருமாள் சன்னிதி கருடன் சன்னிதி மற்றும் முருகன் சன்னிதிகளில் செய்வது சிறப்புடையதாகும்.

புனர்பூச நட்சத்திரத்திற்கு பரம மைத்ரம் என்ற அதி நட்பு தாரா பலன் தரும் நட்சத்திரங்கள் திருவாதிரை,ஸ்வாதி,சதயம் ஆகும்.இவை இடம் பெறும் ராசிகள் மிதுன ராசிக்கு 1-5-9 என்ற திரிகோண ராசிகளாக வரும் என்பதால் புனர்பூசத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் கோவிலுக்கு சிவ பெருமானுக்குப் பாலபிஷேகம் செய்து நடராஜர் சன்னிதியில் சாம்பிரானி தூபம் புகைத்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர உடல் பலம் மன பலம் பெருகும் ஆயுள் ஆரோக்யம் மேம்படும்.

ஸ்வாதி நட்சத்திர நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று கருடாழ்வாருக்குத் தேனபிஷேகமும் குங்குமார்ச்சனையும் செய்து மல்லிகைப்பூ மாலை சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர புத்திர தோஷம் விலகும்.பெற்றோர்களுக்கு பிள்ளைகளால் நன்மை இன்பம் ஏற்படும்.இஷ்ட தெய்வ அருள் மற்றும் மந்திர சித்தி ஏற்பட்டு புத்தி பலம் பெருகும்,விருப்பங்கள் நிறைவேறும் மனதில் தெளிவு பிறக்கும்.

சதயம் நட்சத்திர நாளில் சிவன் கோவிலுக்கு அல்லது முருகன் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்திற்கு அல்லது வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகப்பெருமானுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, ரோஜாப்பூ மாலை சாற்றி வழிபடுவதன் மூலமும்,கோவிலின் முதன்மை அர்ச்சகருக்கு தாம்பூலம் தட்சிணை கொடுத்து அவரிடம் ஆசி பெறுவதன் மூலமும் தந்தை வழியில் நன்மை லாபம் ஏற்படும்,தொழில் வியாபாரம் மற்றும் உயர் கல்வித்தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும்.ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் குருமார்களின் சந்திப்பும் நல்லாசியும் கிடைக்கும்.

புனர் பூச நட்சத்திரத்திற்கு செல்வம் என்ற சம்பத்து தாரா பலன் தரும் நட்சத்திரங்கள் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி ஆகும். இவை இடம் பெறும் ராசிகள் மிதுன ராசிக்கு 2-6-10 என்ற கர்மத் திரிகோண ராசிகளாக வரும்.எனவே புனர் பூசத்தில் பிறந்தவர்கள் பூசம் நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று நவகக்கிரகத்தில் இருக்கும் வியாழ பகவானுக்கு பாலபிஷேகம் செய்வித்து மஞ்சள் ஆடை அணிவித்து மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து பால் பாயாசம் நைவேத்யம் படைத்து  வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் அன்பு,அமைதி,ஒற்றுமை நிலைக்கும். பொருள் வரவு சீர் பெற்று பொருளாதார நெருக்கடி தீரும்,சொல் வாக்கும் செல்வாக்கும் பெருகும்.

அனுஷ நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று பெருமாள் சன்னிதி அல்லது முருகன் சன்னிதியில் பெருமாளுக்கும் தாயாருக்கும் அல்லது வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனுக்கும் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வித்து தாமரைப்பூ மாலை சாற்றி வழிபடுவதன் மூலமும், கோவிலின் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு இயன்ற பொருளுதவிகள் செய்வதன் மூலமும் நோய், நொடிகள்,எதிரித்தொல்லைகள் மற்றும் கடன்,வம்பு, வழக்குகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் வேப்ப மரம் உள்ள அம்பாள் கோவிலுக்குச் சென்று வேப்பமரத்திற்கு நவதானியம் ஊற வைத்த நீரை ஊற்றி வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றி அம்பாளை வழிபடுவதன் மூலமும் கோவிலில் உள்ள பசுக்களுக்கு வாழைப்பழம் மற்றும் உரிய மாட்டுத்தீவணங்களை உபயம் அளிப்பதன் மூலம் செய்தொழில் வியாபாரம் உத்தியோகம் இவற்றில் மேன்மை அடையலாம்.

புனர்பூச நட்சத்திரத்திற்கு சுகம் என்ற ஷேமத் தாரா பலன் தரும் நட்சத்திரங்கள் மகம்,மூலம், அஸ்வினி ஆகும். இவை இடம் பெறும் இராசிகள் மிதுன இராசிக்கு 3-7-11 என்ற காமத்திரிகோண இராசிகளாக வரும். எனவே புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம் நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு வெண்பட்டு ஆடை அணிவித்து வெண்தாமரை மலர் மாலை சாற்றி வழிபடுவதன் மூலமும் கோவிலின் துணை அர்ச்சகருக்கு தாம்பூலம் தட்சிணை அளித்து அவரிடம் ஆசி பெறுவதன் மூலம் இளைய சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும்.வாழ்வில் சுய முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகளிலும் போட்டி தேர்வுகளிலும் வெற்றி கிடைக்கும்.அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

மூலம் நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதன் மூலமும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் திரு உருவப்படங்கள்,சுந்தர காண்டப் பாடல் இவற்றைத் துண்டு பிரசுரம் செய்து உபயமளிப்பதன் மூலமும் கோவிலுக்கு வெண்சாமரம் வாங்கி உபமளிப்பதன் மூலமும் திருமணத்தடைகள் விலகும்.நல்ல நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் அமைவார்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேம்ப்பட்டு இல்லற வாழ்வில் இனிமை சேரும்.

அசுவினி நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று மூல தெய்வத்தின் நாமத்தை ஜெபம் செய்வதன் மூலமும் ஹயக்ரீவர் திருவுருவப்படம் அல்லது சரஸ்வதி அன்னையின் திருவுருவப் படத்துடன் சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர் ஸ்தோத்திரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பக்தர்களுக்கு உபயமளிப்பதன் மூலமும் நினைத்த நற்காரியங்கள் யாவும் நினைத்தபடி நிறைவேறும்.

மூத்த சகோதர சகோதரிகள் மற்றும் வயதில் மூத்தவர்களின் அன்பும் ஆதரவும் சிறப்பாக அமையும்.

புனர்பூச நட்சத்திரத்திற்கு எல்லா வகையிலும் நன்மை தரும் சாதகத்தாரா என்ற பலனளிக்கும் நட்சத்திரங்கள் உத்ரம்,உத்ராடம், கார்த்திகை ஆகும்.இவை இடம் பெறும் இராசிகளின் பெரும் பகுதி மிதுன இராசிக்கு 4-8-12 என்ற மோட்சத்திரிகோண இராசிகளாக வரும்.எனவே புனர்பூசத்தில் பிறந்தவர்கள் உத்ரம் நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று நவக்கிரகத்தில் உள்ள சூரியனுக்கு அல்லது சாஸ்த்தா சன்னிதியில் சாஸ்தாவிற்கு பாலபிஷேகம் செய்வித்து சிவப்பு ஆடை அணிவித்து செந்தாமரை மலர் சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர வீடு,வாகனம்,நிலம், சொத்து,கல்வி இவை தொடர்பான விஷயங்களில் நன்மை மேன்மை அடையலாம்
.
உத்ராட நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று பிள்ளையாருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து நீல நிற வஸ்திரம் அணிவித்து அருகம்புல் மாலை சாற்றி வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் படைத்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்பாராத 

கஷ்டங்கள்,ஆபத்துகள்,அவமானங்கள்,இவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.நீண்ட நாள் பிணி துன்பங்கள் நீங்கி ஆயுள்  பலம் மேம்படும்.

கார்த்திகை நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று கோவிலில் ஹோமங்கள் செய்வதற்கு தேவையான அத்திரமர சமித்துகள் மற்றும் நெய் இவற்றை உபமளிப்பதன் மூலமும் கோவிலின் மடப்பள்ளிக்குத் தேவையான எண்ணெய் மற்றும் எரி பொருட்களை உபயமளிப்பதன் மூலமும் வாழ்வில் தேவையற்றச் செலவுகள் குறையும். வெளி மாநில வெளி நாட்டுத்தொடர்புகளால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும்.
புனர்பூச நட்சத்திரத்திற்கு நட்பு என்ற மைத்ர தாரா பலன் தரும் நட்சத்திரங்கள் சித்திரை,அவிட்டம், மிருகஷீரிடம் ஆகும் இவை இடம் பெறும் இராசிகள் மிதுன இராசிக்கு 1-5-9 மற்றும் 4-8-12 என்ற இரண்டு வகையான திரிகோண இராசிகளையும் இணைக்கும் எனவே புனர்பூசத்தில் பிறந்தவர்கள் சித்திரை நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்திற்கு நெய் மற்றும் விபூதி இவற்றால் அபிஷேகம் செய்வித்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து சிவப்பு நிற ஆடை அணிவித்து பொரி நைவேத்யம் படைத்து வழிபட்டு வருவதன் மூலம் நிலம் சொத்து தொடர்பாக நன்மைகள் கிடைக்கும். தாய் வழி உறவினர்களால் வாழ்வில் நன்மை இன்பம் ஏற்படும்.புத்திர தோஷம் அகலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் சமூகமான உறவு நிலைக்கும்.

அவிட்ட நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று கோவிலில் முரசு அல்லது தவில் வாசிக்கும் பணியாளருக்கு இயன்ற பொருளுதவி மற்றும் வஸ்திர தானம் அளிப்பதன் மூலமும் கோவிலில் அபிஷேகத்திற்கு உதவும் செம்பு உலோகத்தினால் செய்த சிறிய கோப்பை ,குவளை அல்லது குடம் இவற்றை உபமளிப்பதன் மூலமும்

பிரதான அர்ச்சகருக்கு தாம்பூலம் தட்சிணை அளித்து அவரிடம் ஆசி பெறுவதன் மூலமும் எதிர்பாராத நஷ்டங்கள்,ஆபத்து,அவமானம் மற்றும் கண்டங்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.தந்தை வழி சொத்துக்களால் நன்மையும் தந்தை வழியில் உள்ள உறவினர்களால் எதிர்பாராத உதவிகளும் குருமார்கள் மூலம் உயர் கல்விக்கான நிதி உதவிகளும் கிடைக்கும்.

மிருகஷீரிட நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று மூல தெய்வத்திற்கு இளநீர் அபிஷேகம் செய்வித்து தேங்காய் சாதம் நைவேத்யம் செய்து தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலமும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இளநீர் அல்லது தேங்காய் தானம் அளிப்பதன் மூலமும் வாழ்வில் தேவையற்ற செலவுகள் குறையும் வெளி நாட்டுத்தொடர்பு வேலைகளில் நன்மை உயர்வு ஏற்படும்.சயன சுகம் மோட்ச சிந்தனை தியானம் இவற்றில் முழுமையான மனநிறைவு கிட்டும்.

ஜோதிஷண்முகம்
பறக்கை 
9629170821


No comments:

Post a Comment