Sunday, December 18, 2016

திருவாதிரை நட்சத்திர பரிகாரங்கள் :

திருவாதிரை நட்சத்திர பரிகாரங்கள் :

ஜோதிஷண்முகம்
7/43,தெற்கு தெரு
பறக்கை -629601

9629170821

27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரமாக வருவது திருவாதிரை நட்சத்திரம் ஆகும். இதன் அதிதேவதை ருத்ரன் என்ற சிவபெருமான். இதன் வடிவம் தீக்கனல்,ருத்ராக்ஷம் மற்றும் கண்ணீர்த்துளி. இதன் விருட்சம் செங்கரு மரம் ஆகும்.திருவாதிரையில் பிறந்தவர்கள் சிவலிங்கத்திற்கும்  நடராஜ மூர்த்திக்கும் அபிஷேகங்கள் செய்தும் சாம்பிரானி தூபம் புகைத்தும் வழிபடுதல்,செங்கரு மரம் உள்ள ஆலயங்களுக்கு சென்று நவதான்யம் ஊறவைத்த நீரை ஊற்றி வருதல்.இருமுக ருத்ராக்ஷம் அணிதல் இவற்றின் மூலம் சிவனருளை எளிதில் அடைந்து தங்கள் நட்சத்திர பலத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்.

திருவாதிரை நட்சத்திரம் இடம் பெறும் இராசி மிதுனம் ஆகும் இதற்கு பூர்வ புண்ணிய பலன் தரும் இராசியான துலாம் ராசியில் உச்சம் பெறும் கிரகம் சனி ஆவார்.சனி உச்சம் பெறும் நட்சத்திரம் ஸ்வாதி என்பதால் இவர்கள் தங்கள் இறைவழிபாடுகள் மற்றும் பரிகாரங்களை நரசிம்மர், கருடாழ்வார், சன்னிதிகளிலும் சிவலாயங்களில் இருக்கும் கால பைரவர் சன்னிதியிலும் செய்வது சிறப்பு.

திருவாதிரைக்கு செல்வம் தரும் சம்பத்து தாரா நட்சத்திரங்கள் புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி ஆகும். இவை இடம் பெறும் இராசிகள் மிதுன இராசிக்கு 1-5-9 இராசிகளாக வரும்.எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூச நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ராமர் சன்னிதியில் ஸ்ரீராமருக்கு பாலபிஷேகம் செய்து  சாம்பிரானி தூபம் புகைத்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர உடல் நலம் மன நலம் சீர்பெறும் ஆயுள் ஆரோக்கயம் மேம்படும்.

விசாக நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவில் அல்லது முருகன் கோவிலுக்குச் சென்று மூலவருக்கு தேன் அபிஷேகம் செய்வித்து மூலவரின் வாசலில் அமைத்துள்ள சர விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலமும் கோவிலுக்கு முறம் வாங்கி உபயமளிப்பதன் மூலமும் முருகன் சன்னிதியில் தினை உருண்டை தானம் அளிப்பதன் மூலமும் பரம்பரை தோஷங்கள் விலகி புத்தி பலம் பெருகும்,மந்திர சித்தி, புத்திரர்களால் நன்மை போன்ற பலன்கள் கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று தலைமை அர்ச்சகருக்கு மஞ்சள் வஸ்திரம் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் தட்சிணை கொடுத்து அவரிடம் ஆசிபெறுவதன் மூலம் உயர்கல்வியில் மேன்மை தந்தை வழியில் ஆதாயம்,ஆன்மீக குருவின் ஆசி,பயணங்களால் நன்மை,சமூகத்தில் புகழ் பெருமை பெறுதல் போன்ற நற்பலன்கள் கிடைக்கும்.

திருவாதிரை நட்சத்திரத்திற்கு சுகம் என்ற ஷேமத்தாரா பலன் தரும் நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை,ரேவதி ஆகும். இவை இடம் பெற்ற இராசிகள் மிதுன இராசிக்கு 2-6-10 என்ற கர்மத் திரிகோணமாக அமைவதால் திருவாதிரையில் பிறந்தவர்கள் ஆயில்யம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலவருக்கு பட்டு மேல் துண்டு மற்றும் புதுப்பூணூல் அணிவித்து வழிபடுவதன் மூலமும் கோவிலில் விளக்கு ஏற்ற உதவும் விளக்குத்திரிகளை உபயம் அளிப்பதன் மூலமும் குடும்ப வாழ்வில் ஒற்றுமை பெருகும். பொருளாதார பிரச்சனைகள் நீங்கும்,சொல்வாக்கும் செல்வாக்கும் பெருகும்.

கேட்டை நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று கருடாழ்வார் சன்னிதியில் கருடாழ்வாருக்கு குங்குமார்ச்சனை செய்து மல்லிகை மற்றும் ரோஜாப்பூ இணைந்த மாலை சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வருவதாலும் அல்லது சிவன் கோவிலில் இருக்கும் கால பைரவருக்கு குங்குமார்ச்சனை செய்வித்து அரளிப்பூ மாலை சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருவதாலும் நோய் நொடிகள்,கடன் பிரச்சனைகள், வம்பு,வழக்குகள், மறைமுக எதிரித் தொல்லைகள் நீங்கும் அல்லது இவற்றிலிருந்து நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும்.

ரேவதி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வித்து  வெண்தாமரை மலர்மாலை சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலமும் அல்லது அருகில் இருக்கும் கோவிலில் அமைந்துள்ள நவக்கிரக சன்னிதியில் இருக்கும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து நீல நிற வஸ்திரம் அணிவித்து இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட்டு வர செய்தொழில்,உத்யோகம், வியாபாரம் இவற்றில் மேன்மை உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்திற்கு எல்லாவிதத்திலும் நன்மை தரும் சாதகத்தாரா நட்சத்திரங்கள் பூரம், பூராடம்,பரணி ஆகும்.இவை இடம் பெறும் இராசிகள் மிதுன இராசிக்கு 3-7-11 என்ற காமத்திரிகோண இராசிகளாக அமையும். எனவே திருவாதிரையில் பிறந்தவர்கள் பூரம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவில் அல்லது சிவன் கோவிலுக்குச் சென்று மூலவருக்கும் தாயாருக்கும் வெண்பட்டாடை அணிவித்து வெண்தாமரை மலர்மாலை அல்லது மல்லிகைப்பூ மாலை சாற்றி வழிபட்டு வருவதன் மூலமும்,கோவிலில் இருக்கும் நவக்கிரக சன்னிதியில் சுக்கிரனுக்கு வெண்பட்டாடை அணிவித்து மல்லிகை மாலை சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபட்டு ருவதன் மூலமும் அலுவலகச் செயல் திறம் வலுப்பெறும், எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும், இளைய சகோதர சகோதரிகளின் அன்பும்,ஆதரவும் ஒற்றுமையும் மேம்படும்.

பூராடம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்திற்கும் நந்தியம் பெருமானுக்கும் பஞ்சகவ்யம்,பன்னீர் மற்றும் பால் இவற்றால் அபிஷேகம் செய்வித்து மல்லிகைப்பூ மாலை சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலமும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோமாதா திரு உருவப்படத்தை உபயமளிப்பதன் மூலமும் கணவன் மனைவிக்குள் அன்பும் ஒற்றுமையும் வளரும். திருமணமாகாத ஆண் பெண் இவர்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.நல்ல நண்பர்களின் தொடர்பு மற்றும் உதவி எப்போதும் கிடைக்கும்.

பரணி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்திற்கு நெய் மற்றும் தயிர் இவற்றால் அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலமும் நடராஜ மூர்த்திக்கும்  அம்பாளுக்கும் விபூதி மற்றும் குங்குமத்தால் அபிஷேகம் செய்து வெண்பட்டாடை /சிவப்பு பட்டாடை அணிவித்து சாம்பிரானி தூபம் புகைத்து அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர எண்ணிய காரியங்கள் எண்ணியபடி நடக்கும்.மூத்த உடன் பிறப்புகளின் அன்பும் ஆதரவும் சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில், வியாபாரங்கள் இவற்றில் லாபம் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்திற்கு மைத்ரம் என்ற நட்பு பலன் தரும் நட்சத்திரங்கள் ஹஸ்தம்,ரோகிணி, திருவோணம் ஆகும். அதே நேரத்தில் திருவாதிரைக்கு அதிநட்பு என்ற பரம மைத்ர தாரா பலன் தரும் நட்சத்திரங்கள் சித்திரை,அவிட்டம்,மிருக ஷீரிடம் ஆகும் இவை இடம் பெறும் இராசிகள் மிதுன இராசிக்கு 4-8-12 என்ற மோட்சத் திரிகோணமாக அமையும்.எனவே திருவாதிரையில் பிறந்தவர்கள்

ஹஸ்தம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று பிள்ளையாருக்கு பாலபிஷேகம், இளநீர் அபிஷேகம் செய்து சந்தனக்காப்பு சாற்றி பச்சை பட்டாடை அணிவித்து பருப்பு பாயாசம் அல்லது மோதகம் நைவேத்யம் படைத்து வழிபட்டு வருவதன் மூலமும்,

சித்திரை நட்சத்திர நாளில் சிவன் கோவிலுக்குச் சென்று வில்வ இலைகளால் சிவபெருமானுக்கு  அர்ச்சனை செய்வதன் மூலமும், சிவலிங்கத்திற்கு மாதுளைப்பழ காப்பு சாற்றி வழிபடுவதன் மூலமும்,கோவிலின் மடப்பள்ளிக்குத் தேவையான அரிசி,பருப்பு உள்ளிட்ட தானியங்களை உபயமளிப்பதன் மூலமும்,கோவில் வளாகத்தில் வில்வ மரக்கன்று நடுவதன் மூலமும் நிலம்,வீடு, வாகன யோகம் சித்திக்கும். குழந்தைகளுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். தாய் வழி உறவினர்களின் அன்பும்,ஆதரவும் பெருகும்.
திருவோண நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று ஊதுபத்தி, தீப்பெட்டி மற்றும் மடப்பள்ளிக்குத் தேவையான விறகு இவற்றை உபயமளிப்பதாலும், அங்குள்ள பிள்ளையாருக்கு மஞ்சள் ஆடை அணிவித்து,வெள்ளெருக்கு மாலை சாற்றி வழிபடுவதன் மூலமும்

அவிட்ட நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கப் பயன்படும் காகித கோப்பைகளை உபயமளிப்பதன் மூலமும்,வராக மூர்த்திக்கு நீல பட்டாடை அணிவித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலமும், கோவிலுக்குத் தேவையான எண்ணெய் உபயம் செய்வதன் மூலமும் ஆயுள் பலப்படும்.நீண்ட கால துன்பங்கள் பிணிகள் நீங்கும். எதிர்பாராத கண்டம் விபத்து, அவமானம், இழப்பு, இவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளுக்கு பாலபிஷேகம் செய்து தாமரை மலர் மாலை சாற்றி வழிபட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாவல் பழங்களை அல்லது பன்னீர் நாவல் பழங்களை தானமளிப்பதன் மூலமும்

மிருகஷீரிட நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவன்கோவிலுக்குச் சென்று நடராஜர் சன்னிதியில் தேங்காயில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு இளநீர் தானம் அளிப்பதன் மூலமும் நவக்கிரகத்தில் இருக்கும் சந்திரனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலமும் வாழ்வில் வீண் செலவுகள் அலைச்சல்கள் குறையும்.சயன சுகம் கிட்டும்,வெளி மாநில வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை வரும்.


No comments:

Post a Comment