Sunday, November 27, 2016

கார்த்திகை நட்சத்திர பரிகாரங்கள்

கார்த்திகை நட்சத்திர பரிகாரங்கள்

ஜோதிஷண்முகம்

9629170821
_________________________________________
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதன் அதிதேவதையான அக்னி தேவனை வழிபடுதல், ஆலயங்களில்  சிறப்பு ஹோமங்கள் செய்தல், ஆறுமுகப்பெருமானை வழிபடுதல்,அத்தி மரக்கன்று நடுதல் போன்ற செயல்களைப் பொதுவான பரிகாரங்களாகச் செய்யலாம். கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் கால் மேஷ ராசியிலும் எஞ்சிய மூன்று கால்கள் ரிஷப இராசியிலும் அமையும். இதன் பெரும்பகுதியின் ஆளுமை ரிஷபத்தை மையமாக கொண்டே செயல்படுவதாலும் ரிஷபத்திற்கு ஐந்தாமிடம் என்ற பூர்வ புண்ணிய இராசியாக புதனின் உச்ச வீடான கன்னி இராசி அமைவதாலும், கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஷ்ணு ஆலயங்களில் வழிபாடு மற்றும் பரிகாரங்கள் செய்வது சிறந்த முறையாகும். கார்த்திகை நட்சத்திரத்திற்கு சம்பத்து என்ற செல்வம் தரும் நட்சத்திரங்களாக அமைகின்ற ரோகிணி ஹஸ்தம் திருவோணம் என்ற இந்த நட்சத்திரங்கள் அதன் சுயபலத்தை பெருக்கும் என்பதால் கார்த்திகையில் பிறந்தவர்கள்

ரோகிணி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ரோகிணியின் ஆளுமை கொண்ட மலர் கிரீடம் சூட்டி பெருமாளையும் தாயாரையும் வழிபடுவதன் மூலமும்,பாலபிஷேகம் செய்து பெருமாளின் தலைக்கு சந்தன காப்பு சாத்தி வழிபடுவதன் மூலமும்,ஆலயத்தின் பிரகாரங்களில் உள்ள தெய்வ சன்னிதிகளில் மணி உபயம் செய்வதன் மூலமும் தங்கள் சுயபலத்தைப் பெருக்கிக்கொள்ளலாம்.

ஹஸ்த நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்குள்ள விநாயகர் சன்னிதியில் விநாயகப் பெருமானுக்கு லட்டு, வெற்றிலை, பாக்கு,தேங்காய்,பழம் படைத்து, பாலபிஷேகம் செய்து மலர்கிரீடம் சாத்தி வழிபடுவதன் மூலமும் விநாயகரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு லட்டு உபயம் செய்வதன் மூலமும் குல தெய்வ இஷ்ட தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்.புத்திர தோஷங்கள், பிள்ளைகளின் வாழ்வில் இருக்கும் முன்னேற்றத் தடைகள் விலகும்.

திருவோண நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆலயத்தின் தலைமை அர்ச்சகருக்கு வெற்றிலை,பாக்கு, பழம்,தேங்காய்,தக்ஷிணை கொடுத்து அவரிடம் ஆசி பெறுவதன் மூலமும்,ஆலயத்திற்கு ஊதுபத்தி,பந்தல் கால் கம்புகள்,விறகுகள் இவற்றை உபயம் அளிப்பதன் மூலமும் உயர்கல்வியில் மேன்மை,தந்தை வழியில் ஆதாயங்கள்,உயர்ந்த குருமார்களின் ஆதரவு எதிர்கால திட்டங்களில் வெற்றி போன்ற நற்பலன்கள் கிடைக்கும்.

கார்த்திகை நட்சத்திரத்திற்கு சுகம் தரும் ஷேமத்தாரா பலன் கொண்ட நட்சத்திரங்கள் திருவாதிரை, ஸ்வாதி,சதயம் ஆகும். இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் இராசிகள் ரிஷபத்திற்கு 2-6-10 என்ற கர்மத்திரிகோண இராசிகளாக அமையும்.எனவே கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

திருவாதிரை நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலவர் சன்னிதியில் சாம்பிராணி தூபங்கள் புகைத்து வழிபடுவதன் மூலமும்,மூலவருக்கும் தாயாருக்கும் சிவந்த ரத்தினம் பதித்த நெற்றி சுட்டி அணிவித்து,முகத்திற்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபடுவதாலும் பொருளாதார வள்ர்ச்சியும், குடும்ப வாழ்வில் ஒற்றுமையும்,சமூகத்தில் செல்வாக்கும் சொல்வாக்கும் பெற்று வாழும் கொடுப்பினையும் பலனாக கிடைக்கும்.

ஸ்வாதி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆலயத்தின் வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல்,ஆலயத்தில் இருக்கும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுதல்,கருடாழ்வாரின் நெற்றியில் சந்தனம்,குங்குமம் திலகமிட்டு அவர் சன்னிதியில் அகல்விளக்கு ஏற்றி வழிபடுதல்,கோவிலின் துப்புரவு பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு இயன்ற பொருளுதவி செய்தல் இவற்றின் மூலம் கடன்,நோய், வழக்குகளில் இருந்தும் மறைமுக எதிரிகளிடமிருந்தும் தங்களை காத்துக் கொள்ளலாம். எல்லாவிதமான வாழ்வியல் தடைகளும் விலகும்.

சதயம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலவருக்கும் தாயாருக்கும் ரோஜாப்பூ மாலை சாற்றி வழிபடுவதன் மூலமும், கோவில் வளாகத்தில் பூந்தோட்டம் அமைத்து பராமரிப்பதன் மூலமும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கப் பயன்படும் காகித தட்டுகளை உபயமளிப்பதன் மூலமும்,வெள்ளி,பித்தளை உலோகத்தில் செய்த சிறு தட்டு அல்லது தாம்பாளம் இவற்றில் தங்கள் பெயரைப் பதித்து அதை கோவிலுக்கு உபயமளிப்பதாலும் செய்தொழில்,வியாபாரம்,உத்தியோகம் இவற்றில் மேன்மை அடையலாம்.

கார்த்திகை நட்சத்திரத்திற்கு சாதகம் என்ற சுப பலன் தரும் நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகும். இவை இடம் பெறும் ராசிகள் ரிஷபத்திற்கு 3-7-11 என்ற காமத்திரிகோண இராசிகளாக அமையும். எனவே கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

பூசம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளுக்கு புஷ்பார்ச்சனை செய்து வழிபடுவதன் மூலமும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கண்ணாடி பொருட்களை உபயம் அளிப்பதன் மூலமும்,108/1008 சங்காபிஷேகம் செய்வதன் மூலமும்,வலம்புரி சங்கு உபயம் அளிப்பதன் மூலமும்,கோவில் வளாகத்தில் சங்கு புஷ்ப செடிகள் நட்டு வளர்ப்பதன் மூலமும் எடுத்த காரியங்களில் வெற்றி,இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவு, அலுவலகம் மற்றும் பணி இடங்களில் உடன் பணிபுரியும் மனிதர்களின் ஒத்துழைப்பு,சிறந்த நிர்வாகத்திறமை போன்ற பலன்கள் ஏற்படும்.

அனுஷ நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலவருக்கும் தாயாருக்கும் தாமரைப்பூ மாலை சாற்றி வழிபடுவதன் மூலமும், உற்சவ தெய்வங்களுக்கு முத்து மாலை,துளசி மணி மாலை இவற்றை உபயம் அளிப்பதன் மூலமும் திருவிழாக்களுக்குப் பயன்படும் அலங்கார முத்துக்குடை உபயம் அளிப்பதன் மூலமும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மஹாலக்ஷ்மி உருவம் பதித்த படங்கள்,வெள்ளிக் காசுகளை உபயம் செய்வதாலும் திருமணத்தடைகள் விலகும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை வளரும் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும். நல்ல மனிதர்களின் நட்பும்,ஆதரவும் கிடைக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலவருக்கும் தாயாருக்கும் மரிக்கொழுந்து பச்சிலை மாலை சாற்றி வழிபடுவதன் மூலமும்,கோவிலில் இருக்கும் பசுமடத்தில் உள்ள பசுக்களுக்கு வாழைப்பழம் பசுமாட்டுத் தீவனங்களை உபமளிப்பதன் மூலமும்,பசு மடத்தைப் பராமரிக்கும் பணியாளர்களுக்கு இயன்ற பொருளுதவி செய்வதன் மூலமும்,ஆலயத்தின் மடப்பள்ளிக்குத் தேவையான தண்ணீர்குழாய்கள் அமைத்துக்கொடுப்பதன் மூலமும் எண்ணங்களை எளிதில்  செயல்களாக்கி செயல்களில் எதிர்பார்த்த வெற்றியும் அடையலாம்.

கார்த்திகை நட்சத்திரத்திற்கு நட்பு என்ற மைத்ர தாராபலன் கொடுக்கும் நட்சத்திரங்கள் மகம்,மூலம்,அசுவினி ஆகும். இதேப் போல் அதி நட்பு என்ற பரம மைத்ர தாரா பலன்  தரும் பூரம்,பரணி, பூராடம் ஆகிய இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் இராசிகள் ரிஷப இராசிக்கு 4-8-12 என்ற மோட்சத் திரிகோண இராசிகளாக அமையும். எனவே கார்த்திகையில் பிறந்தவர்கள்

மகம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று  கருடாழ்வாருக்கும் நவக்கிரக சன்னிதியில் உள்ள சுக்ர பகவானுக்கும் மல்லிகைப் பூ மாலை சாற்றி,வெண்பட்டு ஆடை அணிவித்து,தலையில் பரிவட்டம் துண்டு கட்டி வழிபடுவதன் மூலமும்,

பூரம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பிரகாரத்தில் இருக்கும் பெண் தெய்வங்களுக்குத் தேவையான ஆடைகளை உபயம் செய்வதன் மூலமும்,மடப்பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஆடை தானம்/இயன்ற பொருளுதவி செய்வதன் மூலமும்
வீடு,வாகனம்,கல்வி இவை தொடர்பாக இருக்கும் தடைகள் குறைகள் அகலும்,தரித்திரம் நீங்கி சுகங்கள் பெருகும்.

மூலம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று கோவிலின் துப்புரவு பணிக்குத் தேவையான துடைப்பம் போன்ற பொருட்களை உபயம்செய்வதாலும்,அங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு இயன்ற பொருளுதவிகள் செய்வதன் மூலமும்,நாதஸ்வர இசைக்கலைஞர்களுக்கு இயன்ற பொருளுதவி செய்வதன் மூலமும்

பூராடம் நட்சத்திர நாளில் மாலை வேளையில் பெருமாள்  கோவில் சென்று அங்குள்ள தெப்பக்குளத்தில் சந்தியா வந்தனம் செய்யும் அந்தணர்களுக்கு தாம்பூலம் தக்ஷிணை கொடுத்து அவர்களைப் பணிந்து ஆசி பெறுவதன் மூலமும் பசுமடத்தில் உள்ள பசுக்களுக்கு  பசுமையான புல்,இலை,தளைகள் கொடுத்து பசுக்களை வணங்குவதாலும் எதிர்பாராத ஆபத்து,நஷ்டம், மற்றும் கண்டங்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.நீண்ட நாள் பிணிகள், அவமானங்கள்,துண்பங்கள் நீங்கி ஆயுள் ஆரோக்யம்  பெருகும்.

அசுவினி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று அகண்ட நாம ஜெபம்,பஜனைகள்,இறை நாம சங்கீர்த்தனம் இவற்றை செய்வதன் மூலமும்,கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஹயக்ரீவர் திருவுருவம் பதித்த படங்கள் மற்றும் ஸ்லோகம் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை உபயம் செய்வதன் மூலமும்

பரணி நட்சத்திர நாளில் பெருமாள் கோவிலில் இருக்கும் மூலவருக்குப் பின்னால் இருக்கும் கண்ணாடி விளக்கில் தீபம் ஏற்ற எண்ணெய் உபயம் செய்வதன் மூலமும், பிரகாரத்தில் இருக்கும் பெண் தெய்வங்களுக்கு அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலமும்,அர்த்த ஜாம பூஜைக்குத் தேவையான நைவேத்ய பொருட்களை உபயம் அளிப்பதன் மூலமும் பூர்வீக பரம்பரை தோஷம்/ சாபங்கள் விலகும், தேவையற்ற அலைச்சல், தூக்கமின்மை, வீண் செலவு, இழப்புகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளுவதோடு, வெளிமாநிலம் மற்றும் நாட்டுத்தொடர்புகளால் நன்மை அடையலாம்.

No comments:

Post a Comment