Saturday, November 19, 2016

பரணி நட்சத்திர வழிபாடுகள் - பரிகாரங்கள்



ஜோதிடர் - ஜோதிட ஆராய்ச்சியாளர்
ஜோதிஷண்முகம்
பறக்கை கிராமம்
குமரிமாவட்டம்
9629170821

27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமான பரணி நட்சத்திரம் அமைந்துள்ளது நெருப்பு ராசியான மேஷ ராசி ஆகும்.இதன் அதிதேவதை காளி தேவி,நட்சத்திராதிபதி சுக்ரன்,நட்சத்திர வடிவம் யோனி,நட்சத்திர விருட்சம் நெல்லி மரம் ஆகும். அசுவினி நட்சத்திரத்தைப் போலவே பரணி நட்சத்திரமும் மேஷ ராசியில் முழு நட்சத்திரமாக அமைவதால் இதற்கும் பூர்வ புண்ணியம் என்ற ஐந்தாமிடம் என்பது சிம்ம ராசியாகவே வரும்.எனவே இவர்களும் தங்கள் இறைவழிபாடு மற்றும் பரிகாரங்களை தங்கள் ஊரில் உள்ள சிவாலயங்களில் செய்வது சிறப்பானது.பரணி நட்சத்திரத்தில் பிறந்த மனிதர்கள் இயன்ற வரையில் காளி தேவியை வழிபடுதல்,நவக்கிரகங்களில் சுக்கிரனை வழிபடுதல் மற்றும் அவரவர் பிறந்த ஊரில் இருக்கும் சிவாலயங்களில் நெல்லி மரம் நடுதல், ஆலயத்தின் மடப்பள்ளியில் அடுப்பு எரிக்க உதவும் பொருட்களை உபயமளித்தல் இவற்றை தங்கள் வாழ்வில் எப்போதும் முதன்மை வழிபாடுகளாக,பரிகாரங்களாக செய்தல் நன்று.

பரணி நட்சத்திரத்திற்கு 1-5-9 என்ற திரிகோண பரம்பரை ராசிகளில் முழுமையாக அமையும் நட்சத்திரங்கள் அசுவினி,மகம், மூலம் ஆகும்.இந்த நட்சத்திரங்கள் பரணி நட்சத்திரத்திற்கு அதி நட்பு என்ற பரம மைத்ர தாரா பலன் தரும் நட்சத்திரங்கள் ஆகும். எனவே பரணியில் பிறந்தவர்கள் அசுவினி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று மூலதெய்வத்தின் மீது நாயன்மார்கள் பாடிய பாடல்களை பாடுவதன் மூலமும்,கருவறையின் வெளிப்புற பிரகாரத்தில் அதன் நேர் பின்னால் அமர்ந்து மூலதெய்வத்தின் நாமத்தை ஜெபம் செய்வதன் மூலமும் தங்கள் சுய பலத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்.

மகம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று மூலதெய்வத்திற்கு தலையில் பரிவட்டம் துண்டு கட்டி வழிபடுவதன் மூலமும்,கருவறையின் சுற்றுப்பிரகாரத்தில் இருக்கும் பலிபீட பூஜைக்குத் தேவையான அரிசி,பூ இவற்றை தானமளிப்பதன் மூலமும்,நவக்கிரகத்தில் இருக்கும் சுக்ர பகவானுக்கு வெண்பட்டு அணிவித்து வெண்தாமரை மலர் சாற்றி வழிபட்டு வருவதன் மூலமும் தங்கள் பூர்வபுண்ணிய பலனை தடையின்றி அடையலாம்.குழந்தை பாக்கியம் குல தெய்வ அல்லது இஷ்ட தெய்வ அருள் மற்றும் மந்திர சித்தி கிடைக்கும்.

மூலம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று ஆலயத்தில் இருக்கும் உற்சவ தெய்வங்கள் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலமும்,ஆலயத்தில் நாதஸ்வரம் இசைக்கும் பணியாளருக்கு இயன்ற பொருளுதவி செய்வதாலும்,ஆலயத்தின் வெளிப்புற துப்புரவு பணிக்குத் தேவையான துடைப்பங்களை உபயம் செய்வதன் மூலமும்,துப்புரவு பணியாளர்களுக்கு பொருளுதவி செய்வதன் மூலமும் உயர்கல்வியில் மேன்மையும், குருவருளும்,அரசு மற்றும் அரசியல் ஆதாயமும், தந்தை வழியில் நன்மையும் உண்டாகும்.

கார்த்திகை,உத்ரம்,உத்ராடம் இந்த நட்சத்திரங்கள் பரணி நட்சத்திரத்திற்கு சம்பத்து என்ற செல்வத்தாரா பலன் தரும் நட்சத்திரங்களாக வருவதாலும் இவற்றின் பெரும் பகுதி மேஷ ராசிக்கு 2-6-10 என்ற ராசிகளில் இடம் பெறுவதாலும் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காத்திகை நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று சிறப்பு ஹோமங்கள் செய்வதாலும்,ஹோமங்களுக்குத் தேவையான அத்தி சமித்து கொடுப்பதாலும்,ஆலயத்தின் மடப்பள்ளிக்குத் தேவையான சிற்றகப்பை,வெட்டு கத்தி,அரிவாள் போன்ற பொருட்களை உபயம் அளிப்பதாலும்,குடும்பத்தில் ஒற்றுமையும், சிறப்பான தனவரவும் ஏற்படும்.

உத்ரம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று ஆலயத்தின் கட்டிட சீரமைப்புக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக்கொடுப்பதாலும், ஆலயத்தின் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலார்களுக்கு இயன்ற பொருள் உதவி செய்வதன் மூலமும்,நவக்கிரகத்தில் சூரியனுக்கு தாமரைப்பூ மாலை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலமும்,தங்கள் கடன், நோய்,வழக்கு,தடைகளிலிருந்து விரைவில் விடுபடலாம்.

உத்ராடம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று ஆலயத்தின் முதன்மை அர்ச்சகருக்கு வெற்றிலை பாக்கு,பழம்,தேங்காய்,துண்டு இவற்றை தக்ஷிணை அளித்து அவரிடம் ஆசிபெறுவதன் மூலமும்,ஆலயத்தில் இருக்கும் விநாயகர் சன்னிதியில் பஞ்சாமிர்த அபிஷேகம், செய்து பஞ்சகூட்டு எண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலமும், ஆலயத்தின் மடப்பள்ளிக்கு முறம் தானம் செய்தல்,சமையல் பணியாளர்களுக்கு கை விசிறி உபயம் செய்தல், மடப்பள்ளியில் புகை,உஷ்ணம் வெளியேற்ற உதவும் மின் விசிறிகள் அமைத்துக்கொடுத்தல் இவறின் மூலம் தங்கள் தொழில்,வியாபாரம், உத்தியோகம் இவற்றில் சிறப்பான முன்னேற்றம் அடையலாம்,

பரணி நட்சத்திரத்திற்கு ஷேமத்தாரை என்ற சுகம் தரும் நட்சத்திரங்கள் மிருகஷீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகும் இவை இடம் பெறும் ராசிகளின் சரிபாதி பாகம் மேஷ ராசிக்கு 3-7-11 என்ற ராசிகளில் அமைவதாலும் இதேப்போல் பரணி நட்சத்திரத்திற்கு சாதகத்தாரை என்ற எளிதில் வெற்றிதரும் நட்சத்திரங்களான புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி என்ற இந்த நட்சத்திரங்களும் இதே 3-7-11 என்ற துணை ராசிகளில் அமைவதாலும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகஷீரிட நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று மூல தெய்வத்திற்கு இளநீர் அபிஷேகம் செய்வதாலும், தேங்காயில் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், ஆலயத்தின் மடப்பள்ளிக்கு சமையலுக்குத் தேவையான தேங்காய் தானம் அளிப்பதாலும் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான எல்லா முயற்ச்சிகளிலும்,போட்டி  தேர்வுகளிலும் எளிதில் வெற்றியடையலாம்.

சித்திரை நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று மூல தெய்வத்திற்கு நெய் அபிஷேகம் செய்வித்து, வில்வ இலை அர்ச்சனையும் செய்து,மூலவர் சன்னிதியில் உருண்டையான பழங்களையும், நிறை நாழியில் பச்சரிசியும் படைத்து வழிபடுவதாலும்,ஆலயத்தில் அச்சதைக்குத் தேவையான பச்சரிசியை உபயம் செய்வதாலும்,கோலமாவு,விபூதி இவற்றை உபயம் செய்வதாலும்,மடப்பள்ளிக்குத் தேவையான தானியங்களையும்,தேங்காய் துருவியையும் உபயம் அளித்து வருவதாலும் திருமணத்தடைகள் விலகும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்,நல்ல தொழில் கூட்டாளிகள் அமைவார்கள்.

அவிட்டம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று சிவலிங்கத்திற்கு கலசம் மூலம் வில்வ ஜலதாரை விழ ஏற்பாடு செய்வதாலும்,ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் மரங்களுக்கு குடத்தில் தண்ணீர் பிடித்து ஊற்றுவதாலும்,ஆலயத்தின் மடப்பள்ளிக்கு குடம்,பானை,குவளை,கோப்பை,வாளி,ஆட்டுக்கல் போன்ற பொருட்களை உபயம் அளிப்பதாலும்,ஆலயத்தில் பாணி,தவில்,முரசு,மிருதங்கம் இசைக்கும் பணியாளருக்கு பொருளுதவி செய்வதாலும் வாழ்வில் எண்ணியது எல்லாம் எண்ணியபடி நிறைவேறும்.

புனர்பூசம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று மூலவருக்கு நைவேத்யம் செய்ய மூங்கில் அரிசி உபயம் செய்வதாலும்,அங்கு பிரகாரத்தில் உள்ள ஸ்ரீராமர் சன்னிதியில் நெய்தீபம் ஏற்றி,சீதாரமருக்கும் லட்சுமண பெருமாளுக்கும் மலர் மாலை சாற்றி வழிபட்டடு வருவதாலும் குடும்பத்தில் சகோதர ஒற்றுமையும், அலுவலகத்தில் சிறப்பான நிர்வாகத்திறமையும்,உடன் பணி செய்பவர்களின் ஆதரவும்,நட்பும் சிறப்பாக அமையும்.

விசாகம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று மூலவர் சன்னிதி வாசலில் அமைந்துள்ள சரவிளக்குகளில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற உபயம் செய்வதாலும்,ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு கைவிசிறி,முறம் இவற்றை தானம் செய்வதாலும்,ஆலயத்தில் இருக்கும் பசுமடத்தில் மின் விசிறிகள் உபயம் செய்வதாலும்,ஆலயத்தின் தலை வாசலை சுத்தம் செய்து கோலமிடும் பெண் பணியாளருக்கு வேண்டிய பொருளுதவிகள் செய்வதாலும்,இல்லற வாழ்வில் நன்மைகள் சேரும்,திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமண வாய்ப்புகள் வீட்டு வாசல் தேடி வரும்.

பூரட்டாதி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று உண்டியலில் இயன்ற காசு,பணம் சேர்த்தலும், ஆலயத்தில் வரவு செலவு கணக்கு அலுவலகத்திற்குத் தேவையான நோட்டு,எழுதுகோல்கள்,மேடைகள் போன்ற பொருட்களை உபயம் அளிப்பதாலும்,அங்கு பணியில் இருக்கும் காரிய அலுவலருக்கு தாம்பூலம்,தக்ஷிணை அளிப்பதாலும் வாழ்வில் பொருளாதர சேமிப்பு அதிகரிக்கும்,திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்தேறும்.

பரணி நட்சத்திரத்திற்கு  நட்பு என்ற தாரா பலன் கொண்ட ஆயில்யம்,கேட்டை,ரேவதி என்ற இந்த நட்சத்திரங்கள் மேஷ ராசிக்கு 4-8-12 ராசிகளில் இடம் பெறுவதால்,பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்ய நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று மூலவருக்கு பூணூல்,மேல் துண்டு இவற்றை அணிவித்து வழிபடுவதாலும்,ஆலயத்தின் விளக்குகளுக்குத் தேவையான பஞ்சுத்திரிகளை உபயம் அளிப்பதாலும்,வீடு,நிலம்,வாகனம்,கல்வி இவை தொடர்பாக சிறப்பான நன்மை,மேன்மைகள் உண்டாகும்.

கேட்டை நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அங்குள்ள காவல் தெய்வங்களுக்கு இரவு கால பூஜையின் போது அகல்விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டுவருவதாலும்,ஆலயத்தின் காவல் பணியில் இருப்பவர்களுக்கு இயன்ற பொருளுதவி செய்வதன் மூலமும்,காவல் தெய்வங்களுக்குரிய கத்தி,ஈட்டி,வேல்,போன்ற பொருட்களை உபயம் அளிப்பதாலும் எதிர்பாரத ஆபத்துகள்,கண்டங்களிலிருந்தும்,அவமானங்களிலிருந்தும்,நாள்பட்ட நோய்களிலிருந்தும், தங்களை காத்துக்கொள்ளலாம்.

ரேவதி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று ஆலயத்தின் குளம்,கிணறு இவற்றில் வாழும் மீன்களுக்கு அவல்/சோறு/பொரிகளை உணவாக அளிப்பதன் மூலமும்,ஆலயத்தின் காலணிகளை பாதுகாக்கும் இடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இயன்ற பொருளுதவிகள் செய்வதன் மூலமும்,குடும்பத்தில் வீண் செலவுகள் குறையும்,வெளி மாநில,அல்லது வெளி நாட்டுத்தொடர்பு வேலை,வியாபாரங்களில் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும்
இப்படி பரணியில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தின் தாரா பலன் அறிந்து நட்சத்திரங்களுக்குரிய வழிபாடுகள்,பரிகாரங்களை செய்வதன் மூலம்,தங்கள் வாழ்வில் நன்மைகளை அடையாலாம்.




No comments:

Post a Comment