ஜோதிடர் - ஜோதிட ஆராய்ச்சியாளர்
கால புருஷனின் இரண்டாவது ராசியாக வரும் காளை வடிவம் கொண்ட ரிஷப ராசியில் முழு நட்சத்திரமாக அமையும் நட்சத்திரம் ரோகிணி ஆகும்.இதன் அதிதேவதை படைப்புக் கடவுளான பிரம்ம தேவன் ஆவார். ரோகிணி நட்சத்திர விருட்சம் நாவல் மரம் ஆகும்.இதன் வடிவம் கோவில் கோபுரம் ஆகும்.எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினமும் பிரம்ம காயத்திரி மந்திரம் ஜெபித்தல்,கோவில் வளாகத்தில் நாவல் மரம் நடுதல்,ரோகிணியில் அவதரித்த கிருஷ்ண பரமாத்மாவை இஷ்ட தெய்வமாக வழிபடுதல் இவற்றின் மூலம் தங்கள் சுய நட்சத்திர பலத்தைப் பெருக்கிக்
கொள்ளலாம்.
ரிஷப ராசிக்கு ஐந்தாமிடம் என்ற பூர்வ புண்ணியஸ்தானமாக புதனின் உச்ச வீடான கன்னி ராசி வருவதால் ரிஷப ராசியின் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் இறைவழிபாடுகள் மற்றும் பரிகாரங்களை பெருமாள் கோவில் அல்லது பிள்ளையார் கோவிலில் செய்வது சிறப்பு.
ரோகிணி நட்சத்திரத்திற்கு அதி நட்பு என்ற பரம மைத்ர தாரா பலன் தரும் நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்ரம்,உத்ராடம்,ஆகும். எனவே ரோகிணியில் பிறந்தவர்கள் கார்த்திகை நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலஸ்தானத்தின் கற்பூர ஆராதனைக்குத் தேவையான பச்சை கற்பூரம் உபயம் செய்வதன் மூலமும்,மூலவருக்கு அருகில் இருக்கும் விளக்குகளில் தீபம் ஏற்ற எண்ணெய் உபயம் செய்வதன் மூலமும் உடல் நலம் மனநலம் மேம்படும்.
உத்ரம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவக்கிரக சன்னிதியில் இருக்கும் சூரிய தேவனுக்கு சிகப்புத் தாமரை மலர் மாலை சாற்றி நெய் தீபமேற்றி வழிபடுவதன் மூலம் இஷ்ட தெய்வ அனுக்கிரகம்,மந்திர சித்தி,புத்திர பாக்கியம் கிடைக்கும் அறிவாற்றல் பெருகும், பிள்ளைகளுக்கு ஆரோக்யம் பெருகும், பெறோர்களுக்கு தங்கள் பிள்ளைகளுடன் சுமூகமான உறவு நிலைக்கும்.
உத்ராடம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்குள்ள விநாயகர் சன்னிதியில் விநாயகருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலம் முன்னோர்களின் ஆசியும், உயர்கல்வியில் மேன்மையும்,ஞான மார்கத்தில் இருப்பவர்களுக்கு நல்ல குருவின் அருளும்,தந்தை வழி உறவுகள் மூலம் நன்மையும்,அரசு வழியில் ஆதாயமும் எளிதில் கிடைக்கும்.
ரோகிணி நட்சத்திரத்திற்கு சம்பத்து என்ற செல்வம் தரும் நட்சத்திரங்கள் மிருகஷீரிடம், சித்திரை,அவிட்டம் ஆகும். அதேப்போல் ரோகிணிக்கு சுகம் என்ற ஷேமத்தாரா பலன் தரும் நட்சத்திரங்கள் புனர்பூசம்,விசாகம் பூரட்டாதி ஆகும் இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் இராசிகள் ரிஷப இராசிக்கு 2-6-10 என்ற கர்மத் திரிகோண இராசிகளாக அமையும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகஷீரிட நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்குள்ள மூலவருக்கும் நவக்கிரக சன்னிதியில் சந்திர தேவனுக்கும் இளநீர் அபிஷேகம், பாலபிஷேகம் செய்து சந்தன காப்பு சாற்றி நெய்தீபம் ஏற்றி தேங்காய் சாதம் நைவேத்யம் படைத்து வழிபட்டு வருவதன் மூலமும்
புனர்பூச நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்குள்ள மூலவருக்கும் ஸ்ரீராமர் சன்னிதியில் ராம பிரானுக்கும் மலர் கிரீடம் சாற்றி சந்தனக் காப்பு சாற்றி வழிபட்டுவருவதன் மூலமும்
பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் நிலைக்கும்.சொல்வாக்கும் செல்வாக்கும் பெருகும்.
சித்திரை நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்குள்ள மூலவருக்கு உருண்டையான பழங்களால் செய்த பழமாலை சாற்றியும்,பச்சரி பால்பாயாசம், வெண்பொங்கல் நைவேத்யம் செய்து வழிபடுவதன் மூலமும் மடப்பள்ளியில் சமையலுக்குத் தேவையான அரிசி பருப்பு போன்ற தானியங்களை உபயம் செய்வதன் மூலமும்.
விசாகம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்குள்ள மூலவர் சன்னிதியின் வாசலில் அமைந்துள்ள சரவிளக்குகள் ஒளிவீசி ப்ரகாசிக்க எண்ணெய் உபயம் செய்வதன் மூலமும் கோவில்களில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு இயன்ற பொருளுதவிகள் செய்வதன் மூலமும் கடன் பிரச்சனைகள் தீரும். வங்கி மூலம் எதிர்பார்க்கும் தொழில், கல்வி, வீட்டு கடனுதவிகள் கிடைக்கும். நோய் நொடிகள்,எதிரி,வம்பு, வழக்குத் தொல்லைகள் நீங்கும்.
அவிட்டம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் பால்குடம் எடுத்துச்சென்று அங்குள்ள மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலமும் மூலவருக்கு நித்ய அபிஷேகம் செய்ய உதவும் குடம் அல்லது நைவேத்யம் செய்ய உதவும் செப்பு பாத்திரம் கலசம் இவற்றை உபயம் செய்வதன் மூலமும் வசதி உள்ளவர்கள் கோவிலுக்கு தானியங்கி முரசு உபயம் செய்வதன் மூலமும்.
பூரட்டாதி நட்சக்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று கோவிலின் முதன்மை அர்ச்சகருக்கு வஸ்திர தானம்,வெற்றிலை பாக்கு,பழம், தேங்காய் சகிதமாக தாம்பூலம், தட்சணை அளித்து அவரிடம் ஆசி பெறுவதன் மூலமும் தங்கள் தொழில்,வேலை, வியாபாரம் இவற்றில் மேன்மை அடையலாம்.
ரோகிணி நட்சத்திரத்திற்கு எல்லாச் செயல்களுக்கும் சாதகமான பலனைக் கொடுக்கும் சாதகத்தாரா நட்சத்திரங்கள் ஆயில்யம்,கேட்டை,ரேவதி ஆகும். இவை இடம் பெறும் இராசிகளான கடகம்,விருச்சிகம்,மீனம் என்பது ரிஷப ராசிக்கு 3-7-11 என்ற காமத்திரிகோண இராசிகளாக அமையும்.எனவே ரோகிணியில் பிறந்தவர்கள்
ஆயில்ய நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்குள்ள மூலவருக்கு புதுப்பூணூல் மற்றும் பட்டு சரிகை கொண்ட மேல்துண்டு அணிவித்து வழிபடுவதன் மூலமும் கோவிலுக்கு விளக்கேற்ற உதவும் விளக்குத்திரிகளை உபயம் செய்வதன் மூலமும்.கோவிலில் பணி புரியும் உதவி அல்லது துணை அர்ச்சகருக்கு இயன்ற பொருளுதவிகள் செய்வதன் மூலமும்.ஸ்ரீராமர் சன்னிதியில் இருக்கும் லட்சுமணருக்கு அங்க வஸ்திரம் அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலமும். எடுத்த முயற்சிகளில் தடையின்றி வெற்றிகளை அடையலாம். அலுவலகத்தில் நிர்வாகத்திறமை மேம்படும் உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும்.இளைய சகோதரர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும்
கேட்டை நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலவருக்கும் தாயாருக்கும் ஆடை அலங்காரம் செய்து மலர்மாலை சாற்றி வழிபடுவதன் மூலமும் பெருமாளின் பெரிய திருவடியான கருடன் சன்னிதியிலும் சிறியத் திருவடியான ஆஞ்ஜநேயர் சன்னிதியிலும் மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னிதியிலும், நெய்விளக்கு ஏற்றி வழிபட்டு வருவதன் மூலமும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வைணவத் திருச்சின்னங்களான சங்கு/சக்கரம்/கருடன்/ஹனுமன் திருவுருவம் பதித்த படங்களை உபயம் செய்வதன் மூலம் திருமணத்தடைகள் அகலும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரித்து இல்லற வாழ்வில் இன்பம் நிலைக்கும்.
ரேவதி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவக்கிரக சன்னிதியில் சனி பகவானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து நீல நிற வஸ்திரம் அணிவித்து இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட்டு ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு எள்ளுருண்டை தானம் அளிப்பதன் மூலமும் கோவிலின் குளங்களில் வாழும் வாமீன்களுக்கு பொரிகளை உணவாக அளிப்பதன் மூலமும்,
கோவிலுகுத்தேவையான வாழை இலை உபயமளிப்பதன் மூலமும் மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் எண்ணியபடி தடையின்றி நடந்தேறும்.மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் பெருகும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்பு என்ற மைத்ர தாராபலன் தரும் நட்சத்திரங்கள் பரணி,பூரம்,பூராடம் ஆகும். இவை இடம் பெறும் ராசிகள் ரிஷப ராசிக்கு 4-8-12 என்ற மோட்சத்திரிகோண ராசிகளாக வரும்.எனவே ரோகிணியில் பிறந்தவர்கள்
பூரம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்குள்ள மூலவருக்கும் தாயாருக்கும் வெண்பட்டு ஆடை அணிவித்து வழிபடுவதன் மூலமும்.கோவில் வளாகத்தில் பலாச மரம் எனற புரசை மரம் நடுவதன் மூலமும். பெருமாளின் வாகனமான கருடனுக்கு வெள்ளை / சிவப்பு நிற பட்டு வஸ்திரம் அணிவித்து, மல்லிகை மற்றும் ரோஜாப்பூ மாலையும், வெள்ளி கண் மலரும் சாற்றி மோதகம் நைவேத்யம் படைத்து வழிபட்டு வர வீடு,வாகன யோகம் சித்திக்கும். தாய் வழி உறவுகளின் அன்பும்,ஆதரவும் பெருகும்.குழந்தைகளுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும்.
பூராட நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று அதிகாலையில் மூலவருக்கு நிகழும் முதல் அபிஷேகத்திற்குத் தேவையான இளநீர்,பன்னீர், பஞ்சகவ்யம் போன்ற அபிஷேகப் பொருட்களை வாங்கி உபயம் செய்வதன் மூலமும்,கோவிலில் இருக்கும் மாடுகளுக்குத் தேவையான பழங்களையும் மாட்டுத்தீவனங்களையும் வாங்கிக் கொடுப்பதன் மூலமும்.மாடுகளைப் பராமரிக்கும் ஊழியர்களுக்கு இயன்ற பொருளுதவிகள் செய்வதன் மூலமும் நீண்ட கால துண்பங்கள்,நோய் நொடிகள், அவமானங்கள்,எதிர்பாராத விபத்து,கண்டம் இவற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ளலாம்.
பரணி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்குள்ள மடப்பள்ளிக்குத் தேவையான எரிபொருட்களை உபயம் அளிப்பதன் மூலமும்,மாதாந்திர ஹோமங்கள் செய்வதற்குத் தேவையான நெய்,சமித்துகள் இவற்றை உபயம் அளிப்பதன் மூலமும். கோவிலிலுக்கு புதிய அகல் விளக்குகளை உபயம் செய்வதன் மூலமும் அங்கு அகல் விளக்குகளை விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு இயன்ற பொருளுதவிகள் செய்வதன் மூலமும் வாழ்வில் வீண் விரயங்கள் கட்டுப்படும்,தலை முறையாக குடும்பத்தில் இருந்து வந்த சாபங்கள் தோஷங்கள் அகலும்.
No comments:
Post a Comment